Tuesday, July 28, 2009

வேர்கள்

ஆசாரி கொஞ்சம் மனப்பிறழ்வில் இருந்தார்.மனைவி இறந்து மூன்று மாதங்களாகி இருந்தன.மூத்தவர் மகன் தான் கொள்ளி வைத்தான்.அதற்கு அவர் சரியாகச் செய்முறை செய்யவில்லை என்று மூத்தவர் மருமகள் அவ்வப்போது சாடை பேசிக்கொண்டிருந்தாள்.குளித்து குங்குமம் பட்டை இட்டு காளி கோயில் போன காலமெல்லாம் மலையேறிப்போனது.கடைசியாகக் காளி கோயில் போன போது அவள் காலுக்கடியில் செத்துக்கிடக்கும் சிலையில் இவருக்கு மனுத முகங்கள் தெரிந்தன.

சிலசமயம் மனைவியின் முகம்.பின்னர் மூத்தவர் மருமகள் முகம்.ஒருமுறை ஆதியின் முகந்தெரிந்தது.மாட்டுக்கார ஆதி .காட்டிலிருந்த காளி கோயிலுக்கருகில் தங்கி இருந்தான்.முதல்நாள் இவர் கஞ்சா இலை கேட்ட போது இல்லை என்று கூறி வசைபாடி விரட்டிவிட்டான்.ஒரு மடிப்புக்கு ஐந்துரூபாய் கேட்டான்.மறுநாள் எப்படியோ வாங்கி விட்டார்.ஆதி சிரிக்கவே காசு கேட்பான். சிடுமூஞ்சி ஆதி.ஆசாரி தனக்குதானே சிரிப்பார் சில சமயம்.
யாரோ ஏன் என்று கேட்டபோது
'ஒங்க எல்லாருக்கும் சேத்து தாண்டா கண்டாரகோலிமயங்களா... நா சிரிக்கிறேன்...கண்டாரகோலித் தேவுடியாமயங்க...' என்றார்.

இப்பொழுது வேலை ஏதும் வருவதில்லை.உளி பிடித்த கை சும்மா இருக்க மறுத்தது.ஒரு நாள் வயக்காட்டில் இருந்த மஞ்சனத்தி மரத்தின் மீது சின்னதாக ஒரு புள்ளையார் செதுக்கிப் பார்த்தார்.தொப்புள் அடிக்கும் போது தொந்தி உடைந்துவிட்டது.

ஒரு விடிகாலை தேவர் வீட்டு தோப்பில் ஒரு மாமரத்தில் சக்தியின் சிலை வரைந்தார். நன்றாக வந்தது. பண்ணைக்காரன் ஏசினான் அதைக்கண்டதும்.
' யோவ்.. அறுவு இருக்கா...இத மிதிச்சு எப்புடி மேல எற்ரது....கிறுக்குக் கொத்தி....'

ஆசாரிக்குப் பொறுக்கவில்லை...மறுநாளே சென்றார்.அன்று முழுக்க அதே வேலை தான். கிட்டதட்ட 10 , 15 மரங்களில் புள்ளையாரும் , சக்தியும் , மதுரை வீரனுமாக வடித்தார்.பண்ணைக்காரனுக்கு கோவம் வந்து புடரியிலேயே நாலு போட்டு உளியை வாங்கி வீசினான்.அதை தட்டுத்தடுமாறி தேடி எடுத்துக்கொண்டு அவனை திட்டிக்கொண்டே சென்றார்.
அவ்வப்போது ஏதோ வேர் முளைக்கிது என்று பிதற்றிக் கொண்டிருந்தார்.மறுமுறை ஆதியை சந்திக்கும் போதும் வேர் முளைக்கிது என்றார்.

'எங்கயா மொளக்கிது...வேரு...'

'எல்லா எடத்துலயுந் தான்டா....மரச்சாமான் பூராம் வேறா மொளைச்சுத் தொங்குதுடா ஆதி...'

'உளறாதயா ஆசாரி...மரச்சாமான்ல வேறு மொளைக்கிதாம்...மசுரு......'

' என்னைய வெட்டுன மரத்துட்ட கூட்டிட்டு போன்னு ஒருநா நாக்காலி சொன்னுச்சுறா.....முடியாதுன்னேன்....மைக்காநாத்து வேரு விட்ருச்சு றா.....பூராத்தையும் வலிச்சு எறிஞ்சுட்டேன்.
சாயங்காலம் பாத்தா எல்லா மரச்சாமானும் தாய் மரத்துட்ட கொண்டு போன்னு வேர் விட்டு அடம்புடிக்கிதுறா.....மேச...நாக்காலி...உத்தரம் மொதக்கொண்டு....'


'சும்மா பொகைய போட்டுட்டு ஒளறாதையா...'

' சத்தியமா டா....வீட்டுக்குள்ள போகவே முடியல ..ஒரே அழுகைச்சத்தம் தாங்க முடியல டா ஆதி....'

'ஆதி...உனக்கு மூக்க மட்டும் கொஞம் கூராக்கி குங்குமப் பொட்டு வச்சு தலப்பா கட்டுனா நாட்டம தோரனைக்கி இருப்படா '

' நீ கெளம்பு மொதல்ல....'

' டேய்...வீட்டுக்கு போனா ஒரே அழுகச்சத்தம் டா...இங்கயே படுத்துக்குறேன் டா....'

'இந்த வேலையே வேணாம்...கெளம்பு...' தோளில் கிடந்த துண்டைச் சுருட்டி அடித்தான்..

ஒருநாள் மாலை மரச்சாமான்களெல்லாம் வெளியில் கிடந்தன...நாக்காலி...மேசை...நிலைக்கதவுகள்...சன்னல்கள்...சில உத்தரங்கள்....ஆங்காங்கே ஓடுகள் கீழே விழுந்து வெளிச்சம் தெரிந்தது.பாத்திரங்கள் , உடைகள் கொஞ்சம் பணம் எல்லாம் அப்படியே இருந்தது.தாழ்வாரத்தில் அவர் மஞ்சள் பையில் சுருட்டி வைத்திருக்கும் உளியும் சுத்தியலும் இல்லை.

ஆசாரி ஆதி வீட்டிற்க்குச் சென்றிருந்தார்.ஆதி நல்ல உறக்கத்தில் இருந்தான்.வெகு நேரம் அவனை வெறித்துப் பார்த்த படி இருந்தார்.கொஞ்சம் புகைத்தார். பின்னர் ஆதி அவரிடம் மூக்கை கூராக்கி நெத்தியில் பொட்டு வைத்து விடச் சொன்னான்.நெற்றிப்பொட்டில் உளியை வைத்தார்.மாடு முதுகு சுளிப்பதுபோல் ஆதி நெற்றியைச் சுருக்கி மெல்ல புன்னகைத்தான்.காளியை வணங்கி ஆட்காட்டி விரலளவுக்கு ஒரு பொட்டு வைத்தார்.குங்குமம் சிதறியது.கொஞ்சம் எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டார். பின்னர் மூக்கை மெல்லச்செதுக்கிக் கூராக்கினார். குங்குமத்தை துடைக்கச் சொல்லி அவன் மார்பில் கிடந்த துண்டை எடுத்துக் கொடுத்தான். அவன் மார்பில் வேர் முளைத்திருந்ததை அப்பொழுது தான் கவனித்தார். அவற்றை அருகில் இருந்த கருக்கறுவாள் கொண்டு சுரண்டினார்.ஆதி சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான்.
'ஏன்டா வேர் மொளைக்கிதுன்னேன் நம்பமாட்டொம்னியேடா...இங்க பார்றா...'

ஆதி சிரித்துக் கொண்டே இருந்தான்.தலப்பா கட்ட போனார்...தலை எங்கும் இன்னும் அடர்த்தியான வேர்கள்...ஆசாரிக்குப் பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது.பாவம் ஆசாரி.முடிந்த வரை கொத்தி எடுத்தார்.
வேர்கள் தாய் மரம் போகனுமென்று அழுதன....ஆசாரிக்குத் தலை வெடித்து விடும் போலிருந்தது.

'ஆதி...ஒனக்கு தாய் மரம் எது டா...' அழுது அரற்றினார். ஆதி மீண்டும் உறங்கிப்போனான்.
வெகு நாட்கள் கழித்து ஊருக்கு வெளியே இருந்த அடர்காட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது.ஓநாய்களுக்கு இரையானது போக மிச்சமீதி இருந்த மனித உடலை கழுகுகள் குதறிக்கொண்டிருந்தன.அருகிலிருந்த மரங்களில் எல்லாம் சிற்ப வடிவங்கள்.சில நாலடி உயரத்தில்..சில கொஞ்சம் கீழே...இன்னும் சில வேர்களுக்கருகே....

No comments:

Post a Comment