திருவான்மியூர் L.B.Road ல் இருக்கும் ஒரு அழகான அடுக்குமாடிக்குடியிருப்பு.இந்தக் கதைக்களம் அங்கே 6 வருடங்களுக்கு முன்னர் அமைந்திருந்தது.அப்போது அங்கே bachelor கள் அனுமதிக்கப்பட்டனர்.ரமேஷும் முகுந்தனும் அங்கே மூன்றாவது மாடியிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர்.
வீட்டிற்கு எதிரே ஒருபெரிய காட்டுப்பூவரச மரம்.குறைதபட்சம் 60,70 ஆண்டுகள் வயதிருக்கும்.3 பேர் சேர்ந்தால் தான் அதன் விட்டத்தைக் கட்டிபிடிக்க முடியும்.மரத்துக்குப் பின்னால் ஒரு பாய் டீ கடை.அருகே ஒரு சேட்டுடைய பான் பீடாக்கடை.அவன் கடை மூடிய பின்னரும் கூட வெகுநேரம் வரை ஜர்தா வாடை வீசும்.கொஞ்சம் தள்ளினால் ஒரு டாஸ்மாக்.காலை 8:00 மணிக்கு திறந்தால் இரவு 12:00 மணிவரை கூட்டங்குறையாத ஒரேகடை அது ஒன்றுதான்.
அன்று வெள்ளிக்கிழமை சுமார் 8:00மணி இருக்கும்.முகுந்தனுக்காக ரமேஷ் காத்துக் கொண்டிருந்தான்.கழுதை கெட்டாதான் குட்டிச் சுவர்.ஆன இவனுங்க கெட்டாலும் சரி ,சந்தோஷமா இருந்தாலும் சரி , மனசு கொஞ்சம் மந்தமா இருந்தாலும் சரி ...டாஸ்மாக் தான்.எட்டரை மணி சுமாருக்கு முகுந்தன் வந்தான்.
' டேய்...ரமேஷ்...மாப்ள...........'
'....டேய்..நாயே....எங்க டா இருக்க...'
' ஒரு நிம்ஷம் மச்சி...' அறைக்குள்ளிருந்து ரமேஷின் குரல்.
' நாயே..ஏன்டா லேட்டு...'
' ஆபீஸ் பஸ்ஸ மிஸ் பண்ட்டேன் மச்சான்.ஷேர் அட்டோல வந்தேன்....ஒக்காலி...பிதுக்கி எடுத்துட்டாய்ங்க....கெளம்புவொமா?...'
' ம்ம்ம்ம்...நீ என்ன ட்ரெஸ் சேஞ் பண்றியா?..'
' இல்ல..இல்ல...அப்டியே போகவேண்டிதான்....'
' சரக்க வாங்கீட்டு வந்துரலாமா ...இல்ல அங்கயே அடிச்சிரலாமா?.......'
' இல்ல மச்சான்...எதித்த கடையில ஒரு கட்டிங் மட்டும் போட்டுட்டு பெஸன்ட் நகர் பீச்சுக்கு போயிருவோம்..மிச்சத்த அங்க பாத்துக்கலாம்... என்ன சொல்ற.....'
' ம்ம்ம்ம் ஓ.கே மாப்ள...'
அங்கே சென்று ஆளுக்கொரு கட்டிங் வாங்கி அடித்தார்கள்.
வழக்கம் போல ஒரே கல்ப்பில் முடித்தான் ரமேஷ்..
'.ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பறம்...என்ன மாப்ள விஷேஷம்.....உன்னோட பாஸ் வீணா என்ன சொல்றா......?....'
' அவ கெடக்கா.....வீணாப்போனவ......உன்னோட ஆளு சவித்ரி என்ன சொல்றா...?......'
' அவ தான் ஒன்னும் சொல்ல மாட்றாளே மச்சான்.......இன்னிக்கி ஸ்லீவ்லெஸ்ல வந்திருந்தா....மாப்ள...............'
' அப்புடிப்போடு......ம்ம்ம்ம்ம்.....'
' ஒக்காலி கை ரெண்டும் உலக்கை மாதிரி இருக்குடா......சரியான பைசெப்ஸ்....டைய்லீ டம்புல்ஸ் எடுப்பாண்ணு நினைக்கிறேன்.....'
' ஹா...ஹா........ஹா....இன்னொரு கட்டிங் சொல்லவா.....?......'
' இல்ல மச்சீ....பீச்சுக்கு போயிடலாம்.....'
' சைக்கிள்ல யா ஆட்டோலயா......?.,.........'
'சைக்கிள்லயே போலாம்டா.......'
ஆளுக்கொரு சைக்கிளில் கிளம்பினர்கள்.
'ஏன்டா முகுந்த்....அரைப்போதையில சைக்கிள் ஓட்றது ஒரு சிறப்பான விஷயம்ல...செமயா இருக்கு.............'
'நிறைப்போதைல பைக் ஓட்னா இன்னும் நல்லாருக்கும் மச்சி..'
' விழுந்தா டப்பா தெரிச்சிரும் டீ.........'
' அதுக்கென்ன செய்றது.....'..வீட்டுக்கு சற்று அருகே உள்ள காய்கறிக்கடையைக் கண்டதும் முகுந்தின் முகம் சற்று மாறியது.
' டேய்..இந்தக் காய்கறிக்கடைகாரன் எந்த ஊருடா மச்சான் '
'தெரில டா...பேசுறத பாத்தா சவுத் மாதிரி தான் தெரியுது....ஏன்...'
'சரியான சைக்கோ தாயிலியா இருப்பான் போலடா ....
'ஹா...ஹா....உன்னய என்ன மச்சான் பண்ணான்..?..'
' இல்ல டா... கடையில எலி மருந்து வைச்சு எலிய புடிக்கிறான்.கொஞ்சம் வீரியம் கமியான மருந்தோ என்னவோ ...அத சாப்டற எலி சாகறதில்ல...லேசா மயங்கீறுது..அவ்ளோதான்...அப்டியே ஓட முடியாம தள்ளாடுது...அது மாதிரி ஒரு எலிய ஒரு நாள் கையில புடிச்சிட்டு போனான்...உயிர் இருக்கு.....சேரி ...பரவா இல்லையே...எலிய கொல்லாம உயிரோட புடிச்சிட்டு போயி விடுறானேன்னு நெனச்சுகிட்டிருந்தேன்.....ஒக்காலஒலி..அத அப்டியே ஒரு பேபர்ல சுத்தி ந்டுரோட்ல விட்டுட்டான்டா...பைக் ல நசுங்கி சாகட்டும்னு.....'
' வக்காலி...இவன ஒரு நாளைக்கி ஏதாச்சும் வம்பிழுத்து கை வைக்கனும் டா.......'
' செய்வோம் மாப்ள....டென்ஷன் ஆகாத...'
' நான் என்ன பண்ணேன்...அந்த எலியஎடுத்து..ஓரமா விட்டேன்..அத பாத்துட்டு..அந்த எதித்த டீ கடையில இருக்க ரெண்டுபேரு என்னய கிண்டல் பண்றாய்ங்க மாப்ள.....கிறுகய்ங்க.......'
' ப்ரீயா விடு மச்சான்...மனுசனுக்கே மரியாதையில்ல...எலிய பத்தி கவலபட்டு என்ன புண்ணியம்...'
' நீயே ஒரு இத்து போனவன்...உன்கிட போயி சொன்னேம் பாரு...ஆயரந்தான் இருந்தாலும் நீ ஒரு கொல்ட்டி தான டா.....'
' ஹா....ஹா.....ஹா....மாப்ள..எனக்கு தெலுங்கே தெரியாது டா...எங்கப்பாவுக்கெ சரியா தெரியாது...நாங்கள்ளாம் தமிலய்ங்க மாப்ள....'
' ஓத்தா.... 500 வருஷத்துக்கு முந்தி....துளுக்கத் தாயிலிங்க...உங்க டவுசரக் கிலிக்கும் போது...எங்க ஊருக்கு ஓடியாந்தவய்ங்கதான் நீங்க...தெரியும்ல.....'
' அதுக்கென்ன மாப்ள செய்றது...ஆந்திரால இருக்க கொல்ட்டிங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்ல டா...நாங்கள்ளாம் தமிலய்ங்களா கன்வர்ட் ஆயிட்டோம் மாப்ள...'
பெஸன்ட் நகர் பீச்சில் இருந்த டாஸ்மாக்கில் சென்று ஆளுக்கு இரண்டு கட்டிங் போட்டுக்கொண்டு பீச்சில் சென்று அமர்ந்தனர்.
ரமேஷ் கடலுக்கு அருகில் சென்று அமரலாம் என்றான்.
' இல்ல மச்சான்..இங்கயே உக்காரலாம்....'
' சேரி அப்பனா கொஞ்சம் சுண்டல் வாங்கு....'
' ஆனா மாப்ள....உங்க ஜாரிங்கள்லாம் செமயா இருக்காளுக டா....உனக்கெல்லாம் ஒக்காலி சக்க பிகரா பாத்து கட்டி வைச்சிருவாய்ங்க டீ...'
' விடு மச்சான்...நமக்கு எவன் டா..பொண்ணு குடுக்க போறான்....'
' என்ன அப்டிச் சொல்லீட்ட...எவனாச்சும் ஒரு இலிச்சாப்பய சிக்கமயா போயிருவான்...நம்ம அப்பய்ங்களுக்கே பொண்ணு குடுத்திருக்காய்ங்க......நமக்கு குடுக்க மாட்டாய்ங்களா.....'
' ரொம்பப் பேசாத...சுண்டல் வாங்கு.....'
' டேய் தம்பி...இங்க வாடா....' வழக்கம் போல முகுந்தன் செலவுதான் இம்முறையும்.
' ரெண்டு சுண்டல் குடுறா....'....' எந்த ஊருடா நீ.....'
' திருநவேலி சார்...'
' திருநவேலியா ...பக்கமா..டா....'
' பக்கம் சார்...அம்பா சமுத்ரம்....ஆனா திருநவேலினாதான் அல்லாருக்குந் தெரியிது...'
'அது சேரி...இங்க எப்டி...வீட்ல இருந்து ஓடி வந்துட்டியா...'
'ஹு...ஹு...ஹு.....ஆமா சார்....'
'ஏன்....'
' அதான் பெரிய பைய்யனாயிட்
டோம்ல சார்...அப்றம் வீட்ல இருந்து என்ன செய்றது....ஹு...ஹு...
' ஒக்காலி..... அதப்பாவே பேசிகிட்டு திரிங்க டா....'ஒரு 5 ரூபாய்த்தாளை எடுத்து நீட்டினான்.
' வச்சிக்க வச்சிக்க....'
' வரேன் சார்...'
இவர்கள் பேசி முடிப்பதுக்குள் சுண்டலை முடித்துவிட்டான் ரமேஷ்.
' ஏன்டா மாப்ள....இவனுங்க ஒரு நாளைக்கு 200 ருபா சம்பாதிப்பானுங்களாடா....'
' தள்ளுவாய்ங்க... 200 ரூபா....மயிரு...30 ரூபாய்க்கு மேல இவய்ங்களுக்கு சம்பளம் குடுக்க மாட்டாய்ங்க டா....
லோக்கல் ஆளுங்க யார் கிட்டயாச்சும் இந்த மாதிரி பசங்க வந்து மாட்டிக்குவாய்ங்க....ஒரு தூக்குச்சட்டி சுண்டல் வித்தா இவளவு ரூபான்னு கணக்கு இருக்கு...ஏமத்தல்லாம் முடியாது....விக்கலையின்னாலும் அடி...ஒக்காலி..வித்து கணக்கு குறைஞ்சாலும் அடி.....'
' 30 ரூபா தானா....என்னடா இப்டி சொல்ற....'
' ஆமா மாப்ள...இந்த பயலுகள்ளாம் பான்டட் லேபர் மாதிரி டா....முக்காவாசிப்பசங்கள அடிச்சுப்போட்டா ஏன்னு கேக்க நாதியில்ல.....முதுகு பழுத்திரும்டீ....இவய்ங்க சட்டய கழட்டி பாத்தீன்னு வச்சிக்க...நூத்துல 70 பேருக்கு முதுகெல்லாம் வீரத்தழும்பிருக்கும்....எல்லாம் வந்த புதுசுல ஊருக்கு எஸ்கேப் ஆக ட்ரை பண்ணி வாங்குறது...அப்பறம் அப்பறம் செட் ஆயிருவாய்ங்க.......'
' ச...பாவம் டா....'
' என்ன செய்றது...இவன மாதிரி ஆளுங்களோட கால்தடத்த மிதிச்சாக்கூட.....உனக்கெல்லாம் பொறுப்புங்கறது வராது.....'
' போடா...மண்டிவெளக்கெண்ண.....'
' டேய்..மரியாதையாப் பேசு....'
' செரி...போங்க மண்டிவெளக்கெண்ண...'
' அடீங்க.......' கையை ஓங்கினான்
' நாயே..இன்னொரு கட்டிங் போடலாமா...?'
' ம்ஹூம்...நீவேணா அடி..எனக்கு வேணாம்...'
பெசன்ட் நகர்பீச்சில் ஒரு சிறிய அமானுஷ்யத்தை அள்ளித்தெளிக்கும் விதமாய் கடலுக்கும் கரைக்கும் இடையே ஒரு சுவரும் , கதவில்லாத நிலைவாசலும் இருக்கும்.அதை நோக்கி அவர்கள் பேச்சு திரும்பியது.அதை அருகில் சென்று பார்த்துவிட்டு வருவதாகக் கூறி ரமேஷ் கிளம்பினான்...போன வேகத்தில் திரும்பினான்.
' கிறுக்குக் கண்டாரகோலிமவய்ங்க...'
' என்னடா ஆச்சு...'
' சுத்தி ஒன்னுக்கடிச்சு வச்சிருக்காய்ங்கடா...நல்ல எடத்த...நாறடிச்சுடாய்ங்க...வாத்தாலக்க....'
'டேய்....என்ன மயிருக்கு நீ அங்க போன....அந்த எடம் நாறிப்போயி கெடக்கும்ன்னு ஒனக்கு இன்னக்கி வரைக்குந் தெரியாதாக்கும்...?..'
ரமெஷுக்கு கோபந்தணிய கொஞ்ச நேரமானது.
வெகுநேரம் உள்ளூர் வெளியூர் அரசியல் பேசிக் கொண்டிருந்தனர்.ரமேஷ்
கிளம்பலாம் என்றான்.ரமேஷை அனுப்பிவிட்டு முகுந்த் மட்டும் கொஞ்ச நேரம் தனியாக அமர்ந்திருந்தான்.கடைசி கட்டிங் உள்ளே சென்று 2 மணி நேரத்துக்கும் மேலாகியிருந்தது.நல்ல போதையில் இருந்துவிட்டு உறங்காமல் அப்படியே போதை தெளிவது என்பது ஒரு சங்கடமான விஷயம்.மனம் அதை அவளவு எளிதாக ஏற்ப்பதில்லை.மேற்கொண்டு ஒரு கட்டிங் போட்டுகொண்டு முகுந்தும் அங்கிருந்து கிளம்பினான்.
பெசன்ட் நகரிலிருந்து நேராய் வந்து எல்.பி. ரோட்டை பிடித்தான்.நல்ல பசி. மணி 11:30ஐ தாண்டியிருந்ததால் ஒரே ஒரு கையேந்தி பவன் மட்டும் குடிகாரர்களோடு சேர்ந்து தள்ளாடிக் கொண்டிருந்தது.சாப்பிடலாம் என்று எண்ணியவன் சட்டைப்பையை துளாவினான்...கொஞ்சம் சில்லரைக்காசு மட்டுமே இருந்தது.பழம் சாப்பிட்டுச் செல்லலாம் என்று முடிவு செய்தான்...ஒரு பழவண்டி இருந்தது.பழக்காரபாட்டி அரைத்தூக்கத்தில் இருந்தாள்.
' பாட்டி...ரஸ்தாலி இருக்கா...?....'
' இல்ல கண்ணா..மஞ்ச பயந்தான் கீது...'
மெட்ராஸில் நாட்டுப் பழம் கிடைப்பது அரிது.சில பழக்கடைக்காரர்களுக்கு நாட்டுப்பழம் என்றால் என்ன்வென்றே தெரியாது.மதுரையில் ஒட்டு வாழையை நாட்டுப் பழம் என்றாலே சண்டைக்கு வந்துவிடுவார்கள்.பச்சைப் பழம் வேறு..புள்ளி வாழை வேறு..
மலைப்பழம் வேறு...மொந்த வாழை வேறு...பூவம் பழந்தான் மெட்ராசில் மஞ்ச பயம்.
ஒன்னாருபா பழத்துக்கு இவளவு விளக்கந்தேவையா என்று கேட்காதீர்கள்.ஏன்னா கரகாட்டக் காரன்ல கவுண்டன் சொல்ற மாதிரி பழந்தான் பெரிய விஷயம்.பழத்தால பரமசிவன் குடும்பமே ரெண்டா பிரிஞ்சு..ஒன்னு பழநிக்கு போயிருச்சு...
என்ன அது...மாம்பழம்..இது வாழப்பழம்..ஆன ப்ரச்சனை எல்லாம் ஒன்னு தான்.
வாழப்பழத்தை பொறுத்த வரை இன்னொரு முக்கியமான விஷயம்.காவெட்டா இருந்தா ரேட்டு ஜாஸ்த்தியா போகும்.ஆனா , உடனே சாப்டற மாதிரி..நல்ல கனிவா..பிச்சதும் மணக்குற பழங்களுக்கு ரேட்டு கம்மியாயிடும்.
' சரி ரெண்டு மஞ்ச பழம் குடுங்க....'
' எவளவு...'
' குடு ராஜா...ரெண்டு ரூபா குடு....போதும்...'
'..ம்ம்ம்ம்...பழம் நல்லாஇருக்கு.....எவளவு நாளா இங்க கடை வச்சிருக்கீங்க...?....'
' 28 வருஷமா இங்க தான் கீறேன்.....
அந்த பிரியாணி கடை இல்ல....அங்க நாங்க பயக்கடை வச்சிருந்தோம்...வூட்டுக்கரு செத்தப்ப்றம் என்னால பாக்க முடீல...'
' ஓ...எப்போ...'
' இன்னாது...'
' உங்க வீட்டுக்காரர் எப்பொ எறந்தார் ....?'
' அது ஆயிட்சி...26 வருஷம்....
எனுக்கு இன்னா வயசாவுதுன்னு நெனிக்கிற.......?.........'
' என்ன ஒரு 60...65 இருக்குமா.....'
' ஆ....இந்த வையாசிக்கு 79 முடிஞ்சு 80 ஆரம்பிக்குது....'
' சும்ம கத வுடாத பாட்டீ.....உன்னய பாத்தா அப்டி தெர்லயே.......'
' அய்ய...உன்னான்ட இன்னாத்துக்கு நான் கத வுடனும்...?...வயச கொற்சி தான் சொல்வாங்கோ....ஜாஸ்தியாவா சொல்வாங்கோ....'நெஜமா தான்....'
' இன்னொரு பயம் சாப்டுறியா...?...'
' இல்ல...பரவால்ல...என்கிட்ட சில்ற அவளவுதான்.....'
'அட...அதுக்கின்னா இப்போ....நாளிக்கி வரசொல்லொ குடு....'
'சரி...குடுங்க...ஒரு பச்சப் பழம் குடுங்க......
பசங்கள்லாம் இல்லையா உங்களுக்கு...'
' இருக்குதுங்கோ...பய்யன் ஒன்னு.பொண்ணு ஒன்னு...'
' கல்யாணம்லாம் ஆயிருச்சா....?....'
'பையனுக்கு கண்ணாலமாயி ரெண்டு பசங்கோ...இஸ்க்கூல் போவுதுங்கோ...'
' பொண்ணுக்குக் கண்ணாலம் பண்ணல நானு....கண் தெர்யாது அவளுக்கு...அதான் கட்டிக் குடுக்கல....'
முகஞ்சுளித்து சற்றே சங்கடத்டோடு ' கண்ணு தெரியாதா?..என்ன வயசாகுது உங்க பொண்ணுக்கு....'
' நாப்பத்தேலாவுது..'
' இத கேக்கலாமா கூடதான்னு தெரியல......
உங்க பொன்ணுக்கு.. பொறந்ததுலேர்ந்தே பார்வை இல்லையா...?....
' ஒரு கண்ணுல பார்வை இல்ல...இன்னொன்னுல லேசா நெயல் ஆடிச்சி...போகப்போகோ...அதுவும் இல்ல..சுத்தமா பூடிச்சி.....இன்னா செய்ருது...ஆரார் தலீல இன்னா எய்தீர்க்கொ அதான் நடுக்கும்..நம்ப கைய்யில என்ன கீது....'
' அது சரி தான்..
ஏன் கல்யாணம் பண்ணிகுடுக்கல...உங்க பொண்ணே வேண்டான்னுட்டாங்களா...?....'
' அதிக்கில கண்ணா...கண் தெரியாத பொண்ண கட்டி குட்தாக்க ரொம்போ கஸ்ட்டம் ராஜா...வூட்டுக்கரன் நல்லவனா இந்தா..போச்சி....இல்லீன்னு வச்சிக்கொ...பேஜாராப்பூடும்...'
'ஜெய்ந்தி தேட்டராண்ட..கன்னியம்மன்னு ஒர்த்தி இர்ந்தா...மொதலியாரு வூட்டு ஆளுங்கொ ..பெரிய இடம்...ஆன நொட்சிட்டாங்கோ...எனக்கு நல சினகிதம்..இப்பொ இல்ல....ரொம்ப வர்சமாச்சி அவொ செத்துட்டு...
அவளுக்கு ஒரு பொண்ணு....ராசத்தி மாதி இருப்பா..ஆனா கண் தெர்யாது....சுத்தமா பார்வ கெடியாது...நெயில் ஆட்டங்கோடோ கடியாது.....அவள ஒர்த்தனுக்கு கட்டி வெச்சாங்கோ....2, 3 வர்ஷம் நல்லாதான் குட்தனம் பண்ணாங்கோ..ஒரு பய்யன்...
அப்பறம் இன்னாச்சி.இவன்....... புருசங்காரன் ...........இன்னொருத்திய வெச்சிகினான்.மொதல்ல ஆருக்குந் தெரியாம வெச்சிந்தான்.அப்றம் அப்டி அப்டீ தெர்ஞ்சி..ஒரே சண்டை ஆயிட்டுது வூட்ல....குட்சிட்டு வந்து பொண்டாட்டிய அடிக்கிறிது...தெருவுல இட்டாந்து..அவளேன்றது....இவளென்றது...அவனோட பட்த்த..இவனோட பட்த்தேன்னு அசிங்க பட்த்தி...ஒரு நாள் இன்னா பண்ண்ட்டான்..அந்த தெவ்வுடியாள வூட்டுக்கே இட்டாந்துட்டான்...கொஞ்சநாள் வெச்சிர்ந்து அவளக் கண்ணாலமுங் கட்டிகினான்...
நீ கூத்தியாள வெச்சிக்க....கண்ணாலங்கட்டிக்க..என்னவோ பண்ணு...கண் தெர்யாத பொண்டாட்டி..ஒரு ஒரமா இர்ந்துட்டு பூட்டுமேன்னு உடலாந்தான....
'இரு...' என்பது போல் கைஅசைத்து சற்றுத்தள்ளிப்போய் புகையிலையை துப்பிவிட்டு வந்தாள்....
' ஒங்கூட பட்த்து ஒரு புள்ளய வேற பெத்திருக்கா.... வூட்லயே இர்ந்துட்டு பூட்டுன்னு வுடலாந்தான.....
இன்னா பண்ணான்....அந்த தெவ்வுடியா முண்ட பேச்ச கேட்டுகுணு இவளுக்குப் பைத்தியக்கரப் பட்டம் கட்டிகினான்...
தூங்க சொல்லோ கயித்த நெரிக்கிறா....நெருப்ப கொயித்தி போடுறான்னெல்லாம் சொல்லி..பைத்தியக்காரப் பட்டங் கட்டி வூட்டவுட்டு தெர்த்திவுட்டுட்டான்...
எனக்கு அவள தவ்வுலூண்டுலேர்ந்து தெர்யும்...எம் பொண்ணுக்கு 6 வருஷம் முத்தவோ...ரோட்லெயே திரிஞ்சா கண்ணா பாவொம்.....சோத்துக்கு வலியில்ல.....கியிஞ்ச பொடவய கட்டிகின்னு....தெர்தெருவா சுத்தி நெஜமாவே பைத்தியம் போல ஆயிட்டா ராஜா.....'
' எங்கண்ணால பாத்தேன்....ஒரு நா..அம்மனக்கட்டையா செத்துப்போயி...எறும்பு மொய்ச்சுப்போயி கெடந்தா.....அப்றமா..அனாதப் பொணம்ன்னு சொல்லி முன்சுபால்ட்டி வண்டீல கொண்டு போனாங்கோ.....'
' அவளுக்கு நடுந்தத இந்த கண்ணால பாத்துட்டு...நான் யோசிச்சுகினேன்....நம்ப கைய்யால இவள கொன்னு போட்டாக்கோடொ பரவால்லே....கண்ணாலங் கட்டி குடுக்க கூடாதுன்னு.....
நொண்டியா இர்க்கலாம்...நொடமா இர்க்கலாம்...கண் தெர்யாது மட்டும் இருக்கக் கூடாது தம்பீ....'
முகுந்தனுக்கு அடிச்ச போதையெல்லாம் இறங்கிப்போனது
இப்ப உங்க பையன் கூட தான் இருக்கீங்களா..?....'
இல்ல கண்ணு....நானும் எம் பொண்ணும் தனியா வூடு எட்த்து சமைச்சு சாப்ட்டுகினு குறோம்...
பையன்கோட தான் இர்ந்தது...எம் மருமவ தெர்த்தி வுட்டுட்டா....
இத்தனைக்கும் எம்மருமவ பொண்ணு யாருன்னு நெனிக்கிற...?
என் சொந்த அண்ணெம் பொண்ணு...நம்பலயும் நம்ப பொண்ணியும் பாத்துக்குவாளேன்னு கட்டி வைச்சேன்...தெர்த்தி வுட்டுட்டா....
'உங்க பையன் எங்க வேலை செய்றார்...?...'
' அவன் பலிய இரும்பு வாங்கி விக்கிறான்....எம்மருமவ பூக்கட்டி விக்கிறா...அலகான ரெண்டு பசங்கோ...
இஸ்க்கூல் போவுதுங்கோ..நல்ல படிக்கிதுங்கோ....நாயித்து கெயமையானா எங்க வூட்டான்ட வந்துடும்....' மெலிதாகச் சிரித்தாள்....
' சேரி பாட்டீ...நான் கெளம்புறேன்...பழத்துக்கு அடுத்த வாட்டி வரும்போது காசு தர்றேன்....'
' அட அதுக்கின்னா இப்போ...காசென்ன ஓடியா பூடுது.....பாத்து போ ராஜா....'
சாலையொரம் சில ரோட்டு மாடுகள்பெரிய தொந்தியைச் சரியவிட்டு அமர்ந்து சாணி ஒழுகிய வால் மயிரால் கொசு விரட்டிக் கொண்டிருந்தன.எப்போதும் அந்த இடத்தைச் சுற்றி இருப்பவை தான்.பெரும்பாலும் பசுமாடுகள்.அவற்றுக்கிடையில் திமிள் பெருத்த ஒரே ஒரு கோவில் மாடு உண்டு.மெட்ராஸ் பாஷையில் சொன்னால் பூம்பூம் மாடு.கொம்பிரண்டிலும் எப்போதும் சகதி ஏறி இருக்கும்.ஈயோ கொசுவோ அமரும்போது தோளைச் சுருக்கி பின்னங்காலை உதைந்து குன்று போல இருக்கும் திமிளை மட்டும் தனியாக ஆட்டும்.கொஞ்சம் அழகாய்த்தெரிந்தாலும் பயமாயிருக்கும்.அதன் இடப்பக்கத் தொந்தியில் ' செ.கா ' என்று பெயரெழுதி இருக்கும்.
கோயிலுக்கு சீலிங் ஃபேனோ , குத்து விளக்கொ..ஏன் குண்டூசியோ கொடுத்தால் கூட அதில் 'உபயம் ' என்று போட்டு குடும்பத்திலுள்ள எல்லார் பெயரையும் எழுதுவது தமிழ் கலாசாரத்தில் ஒரு பிரிக்க முடியாத விஷயம்.சீலிங் ஃபேனில் மூன்று இறக்கை , நடு மண்டை.எல்லாவற்றிலும் பெயரெழுதி இருப்பார்கள்...அதுலேயும் செட்டியார் கோயில்களில் இன்னும் விஷேஷம்..."சொனா.லேனா.மூனா.தானா.பானா.கீனா.ரானா.வான. சாத்தையா செட்டியார் என்றிருக்கும்.ஆச்சி பேரை எழுத இடமிருக்காது.அதனால் றெக்கைக்கு மேல் பக்கம் எழுதிவிடுவார்கள்.பாவம் ஆச்சிமார்கள்.
' செ.கா ' என்பது மாட்டின் பெயராகவோ , உபயமளித்தவர் பெயராகவோ இருக்கக் கூடும்.உபயம் பொருட்களில் எழுதுவதை பொறுத்துக் கொள்ளலாம்.மாட்டின் மீது எப்படிப் பெயர் எழுதுவார்கள் என்றால் அதற்கென்று உள்ள இரும்புக்கம்பியை பழுக்கக் காய்ச்சி அதன் தோல் மீது இழுப்பார்கள்.அந்த தழும்பு தான் மறையாமல் பெயராகிறது.
இது போன்ற தழும்புகள் தான் வரலாற்றுப் புத்தகங்கள் எங்கும் விரவிக்கிடக்கின்றன.வரலாறு வேறெதுவுமே இல்லை.வெறும் தழும்புக்குவியல் மட்டுமே. கோயில் மாடுகள் காயடிப்பதிலிருந்து தப்பித்தாலும் இது போன்று பெயரெழுதும் போது அவை வலியின் உச்சத்தில் எழுப்பும் மரண ஓலம் மாலையாக மாறிக் காளியின் கழுத்தில் சென்று விழுகிறது.பிற கடவுள்கள் ஏற்கப் பயந்ததால் வேறு வழியின்றி நிராகரிக்க மனமின்றி அதைக் காளி ஏற்கிறாள்.இந்த இரக்கச் சிந்தனையே காளியை பயங்கரமானவள் என்று சித்தரிக்கக் காரணமாகி விடுகிறது.
சரி "செ.கா" வைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.செ.கா. அந்த பக்கம் யார் சென்றாலும் அந்தப் பசுக்களை அபகரிக்க வருகிறோமோ என்று எண்ணியோ என்னவோ முட்ட வருவது போல தலையை சிலுப்பி , திமிளை ஆட்டி பயமுறுத்துவான்.நல்லவன் தான்.ஆனாலும் அவனுடமுள்ள ஒரே ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால் ..அருகிலுள்ள பசுமாடுகளைச் சாணிபோடக் கூட வாலைத்தூக்க விடமாட்டான்.சைக்கிள் கேப்பில் ஷேர் ஆட்டொவே ஓட்டீருவான்.
ஒரு வழியாக செ.காவையும் அவன் காதலிகளையும் கடந்து லைசென்ஸ் இல்லமல் ஏட்டுக்களிடம் சிக்கிய இளைஞர்கள் ஏட்டுக்களிடம் கெஞ்சுவதை பார்த்தபடி ஏதேதோ சிந்தனையில் வீட்டிற்குச் சென்றான் முகுந்தன்.
சில நாட்கள் கழித்து அந்த பாட்டியை மீண்டும் சந்திக்குமுன்னர் திருவல்லிக்கேணியிலுள்ள சில பார்வையற்றோர் காப்பகங்கள் பற்றி விசாரித்துவிட்டுச் சென்றான் முகுந்தன்.
' என்ன பாட்டி..எப்டி இருக்கிங்க...'
' ம்ம்ம்....நீ எப்டி கண்ணா கீற...'
' ம்ம்ம்...இருக்கேன்...பாட்டி..
ட்ரிப்லிக்கேன்ல ஒரு பார்வையற்றோர் பள்ளி இருக்கு...அங்க விசாரிச்சேன்...உங்க பொண்ண சேத்துக்கற மாதிரி சொன்னாங்க...'
'ஒன்னும் கஷ்ட்டமே இல்ல பாட்டி...ஒரு டாக்டர் செர்டிஃபிகேட்டு...அப்பறம் கொஞ்சம் ஃபார்ம் எழுதிக் குடுக்கனும்.அவளவுதான்...'
' யாரு எம்பொண்ணையா.... நல்ல வேலையக் கெடுத்தீங்கோ...சொன்னா என்னக் கொன்னே போடுவா...சின்ன வயசுல இருக்க சொல்லொவே கிஸ்ட்டின் ஸ்க்கூள்ல போயி விட்டு ரெண்டு தபா ஓடியாந்துட்டா..
அப்ப்றம் ஒரு வாட்டி சமுத்ரகரைக்கு போயிட்டா...உள்ள வியிந்து சாவறேன்னு.....
அவளுக்கு எங்கூடவே தான் இருக்கனும்...'
' ஓ...அப்டீனா சேரி பாட்டி...எனக்கு தெரிஞ்சவங்க கொஞ்ச பேரு அந்த ஸ்கூல்ல வேலை செய்றாங்க...அதான் கேட்டேன்..'
'...கண் தெரீலேன்னு அவகைல சொல்லவே கூடாது.சொன்னா போச்சு...கோச்சிக்குவா....அலுவா....அடிக்க வருவா....'
'நாலு மாசுத்துக்கு மொந்தி............ மந்திரி வர்றாரு , கண்பார்வை இல்லாதவங்களுக்கு 3000 ரூபா பணந் தர்றாருன்னு கவுன்சிலரம்மா வூட்டான்ட வந்து சொன்னிச்சி....
நான் இவ கையில போயி...வாடி போயி வாங்கினு வரலான்னேன்....அவ்ளோதான்...பேயாட்டம் ஆட ஆரம்பிச்சிகினா...அத்த ஒடிக்கிறா...இத்த ஒடிக்கிறா...உனுக்கு கண் தெர்லேன்னு சொல்லி நீயே காச வாங்கிக்கன்னுட்டா....'
'அம்மா தாயே நீ ஒன்னியும் பண்ண வோணான்னு சொல்லி அவள அமத்தி உக்கார வச்சிகினு...நான் கடையாண்ட வந்துட்டேன்...வந்தா கடீல சரக்கு ரொம்பொ கம்மியா கீது.....சரீன்னு நான் கோயாம்பேடு வரிலும் போயிட்டேன்.
சரக்க வாங்கிகினு வந்து எறங்கும் பொது மணி 2:00 இருக்கும்.
என்னப் பாத்ததும் எயித்த போலீடேசன் ஏட்டையா ஓடியாந்து சொல்றாரு...முனீமா...முனீமா...உம்பொண்ணு நெருப்பு வச்சிகினான்னு...
எனக்கு இன்னா ஏதுன்னு சொல்லத் தெரீல தம்பி..
ஐயையோ நான் இன்னா பண்ணுவேன்னு நெஞ்சிலியும் மார்லியும் அடிச்சிகினு கத்துனேன்....
' ராயப்பேட்ட ஆஸ்பட்டல்ல சேத்துருக்காங்கோ சீக்கிறம் போமான்னாரு...'
அட்சி புட்சி போயி பாத்தாக்கா...ஆப்பரசம் பண்ண் இட்னு போயிட்டங்கோன்னாங்கோ....
நரசம்மா கையில கேட்டேன்...உசுர காப்பாதீட்லாம்...ஒன்னியும் ஆவாது...அலுவாதென்னாங்கோ....'
காலீலேந்து ஒரு காபிதன்னிகோடோ குடிக்கில...மறுநா வெடிகாலீல போயிப்பாருன்னாங்கோ...பாத்தா ஒடம்பெல்லாம் ரத்த ரத்தமா கீது....பாளம் பாளமா பாளம் பாளமா வெடிச்சிக்கிது...ஆட்டுக்கறிய நெருப்புல வாட்டுனாப்போல..
ஸ்ஸ்ஸ்....அம்மாடியோ...அல்லய புட்சிட்டுது கண்ணா எனுக்கு.....
' ஐய்யோஓஓஓ....எம்ம்மவளென்னேன்...அப்புடியே என்ன இட்னுபோயி வெளிய வுட்டாங்கோ...'
அத்த நெனச்சா இப்பக்கோடோ புல்லரிச்சிடுது....நெத்தியெல்லாம் பாரு...வேர்த்துகிது....'
முந்தானையை எடுத்து நெற்றியைத்துடைத்துக் கொண்டார்.
ஒரு பெருமூச்சோடு... ' ரெண்டு மாசம் இருந்தா ...ஆஸ்பட்டல்ல...அப்பறமா வூட்டுக்கு கூட்னு போயிட்டேன்.
ரெண்டு மாசமா யாவாரம் பூடிச்சி...அல்லாம் பூடிச்சி....பேங்குல 6500 ரூபா வெச்சிந்தேன் அல்லாம் காலி...எதுத்த வூட்டு டீச்சரம்மா இல்ல..அது கைல ஒரு 3000 ரூப சீட்டு போட்ருந்தேன்...அதியுங் காலி பண்ணியாச்சி...
அட்த்த நாள் எம்மவன் வந்து ஆயரூபா தந்தான்.....எட்த்து வீசீட்டேன் அவன் காச....
எம்மூஞ்சீலயே முலிக்கதடான்னுட்டேன்.....
எனக்கு இன்னத்துக்கு அவன் காசு....நீ எனுக்கே பொறக்கல டா...எவளோ தெவ்வுடியாளுக்கு பொறந்திருக்கேன்னுட்டேன்...'
ஐயோ ராஜா....நாம பட்ட கஸ்ட்டம் ஆருக்குமே வரக்கூடாது...
ஆத்தாடி....நெனச்சாலே .உடம்பெல்லாம் பயம் வந்துகிது.....
மூணு மாசமாகி...அப்போதான்...தீக்காயம் ஆறியும் ஆறாமயும் இருகுது.......வவுத்த வலிக்கிதுடீன்னுட்டா...
நம்ப...அப்க்கத்துல இருக்க அல்லா கோயில் இல்ல..அந்த டாக்டராண்ட இட்னு போனேன்...வெள்ளிகெயம போனாக்கா நம்பலப் போல ஏலிங்க கைல காசு வாங்க மாட்டரு...ரெண்டு நாளு பாத்தாரு வவுத்த வலி கொறியிறாப்பொலேயெ இல்ல...அப்பறம் அவரும் ராயப்பேட்ட ஆஸ்பட்டலுக்கு போன்னு சீட்டெலுதி கொட்துட்டாரு....அங்க போனா....படம் எடுத்து பாத்துட்டு...வவுத்துல கட்டி இருக்கு...ஆப்பரசம் பண்ணனும்....இல்லாங்காட்டி சிக்கலாயிக்கும்...சான்லி ஆஸ்பட்டலுக்கு போண்ணுட்டாங்கோ....
சரீன்னு சான்லி ஆஸ்பட்டலுக்கு போனேன்...அங்க ஒரு ஒரு வாரம் பெட்ல வெச்சிந்தாங்கோ...குல்கோஸ் ஏத்துனாங்கோ...ஆப்பரசம் எப்பொ பண்ணுவீங்கோன்னு கேட்டாக்கா...அந்த வாடு பாய் என்னான்றான்...250 ரூபா குடு...அப்பொ தான் உம் பொண்ணோட பேர ஆப்பரசம் பண்ரவங்கொ இதுல...சேக்க முடியும்ங்கறான்....
எங்கையில 250 எல்லாம் இல்ல ராஜா...நாங்கொ ஏலிங்கோன்னேன்...அதெல்லாம் ஒன்னியும் வேலைக்கே ஆவாதுன்னுட்டான்...நான்...நேரா டாக்டரம்மா கையில போயி கேட்டென்...ஏம்மா...நாங்களே ஏலிங்கோ...எனாமா வைத்தியம் பண்ன சொல்லி அர்சாங்கம் சொல்லுது...இந்த வாடு பாயி 250 ரூப பணங் குட்ததான் அப்பரசம் பண்ண முடியும்ங்கறான்....எங்கையில பணங் காசு ஏதுமில்ல....முடிஞ்சா ஆப்பரசம் பண்ணுங்கோ...இல்லீனா டிச்சாஜி பண்டுங்கோ நான் எம்மவள வூட்டுக்கு இட்னு போறேன்னேன்...
அந்த மவராசி வாயும் வவுருமா இர்ந்தா...நீ ஒன்னியும் பணந்தர வோணாம்...ஆப்பரசம் பண்ரதுக்கு நான் ...இது.....ஏற்பாடு செய்றேன்னாங்கோ...
மறாநாள் ஆப்பரசம் பண்ணி..அந்த கட்டிய எங்கையில காட்ணாங்கோ...நல்ல உள்ளாங்கை பெர்சா கீது ...ரவுண்டா....உருளக்கெயங்கு மாதிரி....
இது ஏங்க வர்துன்னு கேட்டாக்கா...அது அப்டி தான் வரும்...அன்னு சொல்றாங்கோ....
அதுல பாரு கண்ணா...இந்த அப்பரசம் பண்ண கட்டிய இன்னா பண்றாங்கோ...பெரிய பெரிய ஆர்லிக்ஸ் பட்டல் இல்ல...அதுல போட்டு மொதக்க வுடுறாங்கோ...
அது இன்னத்துக்குன்னா ...டாக்டருக்கு படிக்கிது பாரு புள்ளீங்கோ..அதுங்க வந்து...இத பாத்து கத்துகுதுங்கோ...இது இன்னா து....இன்னா த்துக்கு வருது...இன்னா ஏதுன்னு படிக்கிதுங்கோ....
ந்மக்கு எங்க தெரீது அதெல்லாம்....
வெற்றிலைக்கறை விளையடிய பற்களைக்க் காட்டி ஒரு மெல்லிய சிரிப்பு....பாட்டியின் பல் வரிசையைப் பர்த்தால் 80 வயது என்று நம்புவதே கடினம்.
ஊட்டிக்கரப்ப் பையன் ஒரு டாக்டரு இருந்திச்சி..நல்ல பாத்துகிச்சி....உன்னப்போலவே இருக்கும்...பாட்டி பாட்டீன்னு....
நல்லா இருக்கணும் மவராசன்...
' உங்க பொண்ண வீட்டுக்கு கூட்டீட்டு வந்து எவளவு நாள் இருக்கும்...? '
' பத்து நாள் இருக்கும் '
தயங்கி தயங்கி ஒரு நூறு ரூபாயை எடுத்து நீட்டினான்...
' இந்தா பாட்டி...உம்பொண்ணுக்கு ஆர்லிக்ஸ் எதனா வாங்கி குடு....'
' ஐய்ய.....எனுக்கு இன்னாத்துக்கு...நீ வெச்சிக்க ராஜா....'
' பரவால்ல வாங்கிக்க பாட்டீ...'
அவன் கன்னத்தை தடவினாள்....
' வோணா ராஜா வோணும்னா உங்கையில கேட்டு வாங்கிக்குறேன்...இதுல இன்னா கீது....'
எனுக்கு காலம் போன காலத்துல வேற எதுவுமே வோணாங்கண்ணா...தெனித்திக்கும் இத ஒன்னுதான் அந்த காளியாண்ட கும்புட்டுக்குறேன்...எனுக்கு முந்தி எம் பொண்ணு செத்துடணும் தம்பீ....
கொஞ்ச நேர மெளனம்.கிழவி கண்களைப் பார்த்தான்.கண் கலங்கப் பார்க்கிறது...ஆனால் ஏதோ தடுக்கிறது... மின்னல் போல சடாரென்று நொடிப்பொழுதில் ஒரு மிருகம் அவள் இடக்கண் வழியாக வெளியேறி இவனை கண்டு ஒருமுறை உறுமிவிட்டு வலக்கண் வழியே உள்ளே சென்று மறைந்தது.கண்சிமிட்டினாள்.
அதுல பாரு ராஜா...போனாவாரம் ரோட்டுக் கடையெல்லாம் எடுக்க சொல்லி போலீஸ்ல சொல்ட்டங்கோ...இங்க கானி இல்ல...ஊர்பூராம் சொல்ட்டாங்கோ...பீச்சு , ரயில்வேடேசம் , கோயாம்பேடு...அல்லா எடுத்திலியும்...அப்பொ..நம்ப ஏட்டில்ல..அவரு...அதோ நிக்கிறா பாரு கயவானி முண்ட...அவ கடைய எடுக்க சொல்றாரு....அவோ இன்னான்றுக்கா...முனீமா கடைய எட்க்க சொல்லுங்கோ நானும் எடுக்குறேன்றுக்கா.....தட்டுவானி முண்ட...
ஏட்டுக்கு பலியா கோவம் வந்துட்டுது....
' உம்பொண்ணு கண்ணு ரெண்டையும் கம்பியால குத்தி அவிச்சிடு...உன்னியும் கடை போட வுடுறோம்..'...ன்னு சொல்லீருக்காரு...
வாயையும்...அதையும்...பொத்திகினு காலி பண்ணா....அப்றமா...
அப்றோம் அவ வூட்டுக்காரன் போயி எஸ்.ஐ யாண்ட...காசகன்னிய குட்த்து... நேத்திலேந்து திருப்பி வெச்சிக்கிறா...
' சேரி பாட்டி...நான் கெலம்புறேன்...காச வாங்கிக்க மாட்டியா....'
'இருக்கட்டும் ராஜா....'
'போய் வா...'.... பாத்துப்போ...இந்த ஷேர் ஆட்டோக்கார தெவ்வுடியாப் பசங்க வந்தாக்கா நல்லா ஒதுங்கீடு.
நேத்திக்கோடோ அந்த கடையாண்ட ஒரு பெரியவர இடிச்சி தள்ட்டானுங்கோ...'
' சேரி பாட்டி '...என்றபடி கிளம்பினான்...
சற்று தூரம் சென்றதும் ' செ.கா' வைக்கண்டு ஒதுங்கும் போது ஷேர் ஆட்டோவில் இடித்துக் கீழே விழுந்தான்.லேசான காயம்...எழுந்து ...திரும்பிப்பார்த்தான்..பாட்டி இவன் விழுந்ததைக் கவனிக்க வில்லை...
கையை உதறியபடி தனக்குத்தானே ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்....
Sunday, January 11, 2009
Subscribe to:
Posts (Atom)